அமைச்சரவையில் புதிய மாற்றம் நடைபெறும்.

இன்று நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் அடுத்தவாரம் புதிய அமைச்சரவையை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெறும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அக்கிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்பாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அலரிமாளிகையில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்,இதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 30 அமைச்சுக்கள் மட்டுமே நியமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாக வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது என்றும் அக்கிலவிராஜ் காரியவசம் திட்டவட்டமாக கூறினார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த விடயத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருக்கின்ற மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐக்கியதேசியக் கட்சி முன்நிற்கும் என்று தெரிவித்த அக்கிலவிராஜ் காரியவசம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்திருப்பதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: