தமிழ்லீடர்

அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில் ஜெனீவா செல்ல இருக்கும் குழு!!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியான பிரதிநிதிகள் குழுவை அனுப்பமாட்டார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேற்படி இன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,“வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில் அரசாங்கத் தரப்புக் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார்.

எனினும், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள கலாநிதி சரத் அமுனுகமவும் அரசதரப்புக் குழுவில் இடம்பெறுவார். அவர் சிறிலங்கா ஜனாதிபதியின் சிறப்புப் பிரதிநிதியாக செல்கிறார். இந்தக் குழுவில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் இடம்பெற்றுள்ளார்.

எனவே அதிகாரபூர்வமான குழுவை ஜெனிவாவுக்கு அனுப்புவதில்லை என்றும், அங்குள்ள சிறிலங்கா தூதரகமே அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வெளிப்படுத்தும் என்றும், முன்னதாக அரசாங்கம் முடிவெடுத்திருந்த நிலையிலேயே, சிறிலங்கா ஜனாதிபதி தமது தரப்பில் குழுவொன்றை அனுப்ப திட்டமிட்டிருந்தார்.ஆரம்பத்தில் இந்தக் குழுவில் எனது பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

எனினும், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரே குழுவை அனுப்புவது முக்கியமானது என்று சிறிலங்கா ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டி அந்தக் குழுவில் இருந்து நான் விலகிக் கொண்டேன்.பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது.

மார்ச் 21ஆம் நாள் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உரையாற்றுவார்.

எனவே அந்த உரையின் உள்ளடக்கங்களை சிறிலங்கா ஜனாதிபதியின் பிரதிநிதியான சரத் அமுனுகம வரைந்து கொடுப்பார்.வெளிவிவகார அமைச்சரின் உரை, சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒப்புதலுக்காக காண்பிக்கப்படும். சிறிலங்கா ஜனாதிபதியை ஒதுக்கி வைத்து நீங்கள் அதனைச் செய்ய முடியாது” என்றும் அவர் கூறினார்.

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: