தமிழ்லீடர்

அரச ஊழியர்களை வீணாக அச்சுறுத்த வேண்டாம்!

அரசாங்க ஊழியர்களை எதிர்தரப்பினர் அச்சுறுத்துவதாக முன்னாள் அமைச்சர்கள் குற்றசாட்டு.

மேற்படி அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும், ஓய்வூதியம் வழங்குவதற்கும், சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கும் எந்தவித தடையுமில்லை. வீணாக எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். 

மேலும் அரசியல்வாதிகளான எம்மை அச்சுறுத்துங்கள், அப்பாவி அரசாங்க ஊழியர்களை அச்சுறுத்த வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

எனினும் தற்போது தோன்றியுள்ள அரசியல் சூழ்நிலையால் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கோ, ஓய்வூதியக்காரர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்குவதற்கோ, சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கோ, கடன்களை மீளச் செலுத்துவதற்கோ பணம் எடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எந்தவிதமான உண்மையுமில்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய டிசம்பர் 31ஆம் திகதி வரையான செலவீனங்களுக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அரச செலவீனங்களை இதிலிருந்து மேற்கொள்ளலாம் எவரும் இதை தடுக்க முடியாது. எனவே அமைச்சர்களின் செயலாளர்கள் எவ்வித தடையுமின்றி அதனை செலவுசெய்ய முடியும் என குறிப்பிட்ட அவர்

பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் அரசாங்க ஊழியர்கள் தடையின்றி பணியாற்றுவதற்கு இடமளிக்க வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உள்ளது என முன்னாள் அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்திருந்தாலும் அமைச்சு அலுவலகங்கள் செயற்படுகின்றன என்பதால் அரசாங்க ஊழியர்கள் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

எனினும் அரசாங்க ஊழியர்கள் எந்த கட்சி பேதமும் இன்றி செயற்படுபவர்கள். அரச பொறிமுறையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இதனைக் குழப்பும் நோக்கிலேயே அரசாங்க ஊழியர்களை எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் அச்சுறுத்துகின்றனர் என லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டினார்.

மேலும் தமது அரசாங்கம் நிர்வாகத்தைப் பொறுப்பெடுத்து ஒரு சில நாட்களுக்குள் 31 நிவாரணத் திட்டங்களை முன்வைத்தது. இதனைப் பொறுத்துக் கொள்ளாமலே பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக இடைக்காலத்தடையுத்தரவைப் பெற்றுள்ளனர். அரசாங்க ஊழியர்கள் கௌரவமாக செயற்படும் நிலைமை தற்போது மாறியுள்ளது. எனவே நிலையான அரசாங்கமொன்று உருவாகியதும் அரசாங்க ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: