இந்த நாட்டை நாசம் செய்தவர்கள் யார்?

பிரதமராகக் கடமையாற்றிய ஐம்பது நாட்களில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, இந்த நாட்டை நாசம் செய்தாரா? இல்லை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நாட்டை நாசம் செய்தாரா? என்பதை குறித்து, நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த வேண்டுமெனக் கோரிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பி பந்துல குணவர்தன, அரசாங்கத்தில் நடத்தப்படும் போலிப் பிரசாரங்களால், சர்வதேசக் கடனுதவிகள் ​தடைப்படும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – புஞ்சி பொரளையில் உள்ள, வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில், நேற்று முன்தினம் ந​டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷவின் 50 நாள் குறுகிய அரசாங்கமே, இந்நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு காரணமென, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்து, முட்டாள்தனமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஐம்பது நாட்களில், 8 பில்லியன் டொலர்களை மஹிந்த ராஜபக்‌ஷ நாசம் செய்ததாக, பிரதமர் பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய பந்துல எம்.பி, பிரதமரின் கருத்து, முற்றிலும் பொய்யானது ​எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசெம்பர் மாதம் வரையான வெளிநாட்டுக் கையிருப்பு தொடர்பில், இலங்கை மத்திய வங்கி, உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டுமெனவும் இதன்மூலம், வெளிநாட்டுக் கையிருப்பு தொடர்பான உண்மையைக் கண்டறிய முடியுமெனவும், சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் போலியான பிரசாரங்கள் தொடருமாயின், சர்வதேச நாடுகளின் கடனுதவிகளும் தடைப்படும் ஆபத்து ஏற்படுமென எச்சரித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி வேட்பாளராக, ஜனாதிபதிப் பதவி வகிக்காத ஒருவரைத் தெரிவுசெய்வதே வழக்கமெனவும் சுட்டிக்காட்டிய பந்துல குணவர்தன, ஜனாதிபதி வேட்பாளராக யாரைக் களமிறக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை மூடி மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: