இளைஞன் ஒருவரை சுட்டுக்கொண்ட சந்தேகநபர் 10 வருடங்களின் பின்னர் கைது!

புத்தளம் வான் வீதியில், இளைஞன் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், புத்தளம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த, 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும்,
சந்தேகநபர் கடந்த 2008 ஆம் ஆண்டு, புத்தளம் வான் வீதியில் தனது நண்பர்களுடன் இணைந்து, 21 வயதுடைய இளைஞனை  துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர் நாட்டைவிட்டு வெளியேறி சிங்கப்பூர், சவூதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு சென்று தலைமறைவாகி இருந்துள்ளாரென, புத்தளம் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, அளுத்கம- தர்கா நகர் ஆகிய பகுதியில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தையடுத்து,
பத்து வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை நேற்று புத்தளம் நகரில் வைத்து பொலிஸார் கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த இளைஞனை படுகொலை செய்த துப்பாக்கியை புத்தளம் வான் குளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் வழங்கி வாக்குமூலத்தின் அடிப்படையில், துப்பாக்கியை தேடும் நோக்கில் சந்தேக நபரை இன்று காலை புத்தளம் வான் குளத்துக்கு அழைத்துச் சென்ற பொலிஸார், கடற்படையினரின் சுழியோடி குழுவினரினரால், துப்பாக்கியை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், புத்தளம் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன தலைமையிலான பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: