எதிர்கட்சி உறுப்பினர்கள் லிப்டில் சிக்கி தவிப்பு!!!

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று சபா நாயகர் தலைமையில் கூடியுள்ள நிலையில் சபை அமர்வுகளுக்காக வந்த உறுப்பினர்கள் சிலர் சுமார் அரை மணி நேரம் நாடாளுமன்ற லிப்டில் சிக்கித் தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்படி எதிர்க்கட்சி வரிசையைச் சேர்ந்த விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி உட்பட்ட உறுப்பினர்களே இதில் திடீரென சிக்கிக்கொண்டனர்.

எனவே லிப்ட் சீராக இயங்காத காரணத்தினாலேயே இந்த திடீர் நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் வேகமாக செயற்பட்ட நாடாளுமன்ற மின் பொறியியலாளர்கள் குறித்த விடயத்தினைச் சீராக்கி லிப்டில் சிக்கியிருந்தவர்களை மீட்டுள்ளனர்.

எனினும் நாடாளுமன்ற அமர்வு வேளையில் லிப்ட் தொடர்பான பிரச்சினை சிறிது நேரம் சர்ச்சைக்குரியதானது. இதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பேசும்போது, “உயிர்களை பலியெடுக்கும் சதியாக இது இருக்கலாம் என்பதால் அதனூடாக சபா நாயகர் செல்லும்போது மிக அவதானமாக இருக்கவேண்டும்” என கூறினார்.

இதற்கு பதிலளித்த சபா நாயகர், “நேரம் வந்தால் போகவேண்டியும் வரும்” என நாசூக்காக சிரிப்புடன் சொல்லியுள்ளார்.

மேலும் சில உறுப்பினர்கள் இதே விடயத்தினைச் சுட்டிக்காட்டியமையையடுத்து அது குறித்து உடனடிக் கவனமெடுக்கப்படும் என சபா நாயகர் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: