எம்மைப்பற்றி

சர்வதேசச் சுழலுக்குள் சிக்கியிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டிய தேவை மிக முக்கியமாக உள்ளது. முள்ளிவாய்க்காலின் பின்னான காலம் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழினத்திற்கு முக்கிய இடம்வழங்கியிருக்கின்ற போதிலும் தமிழினத்திற்கு தலைமை தாங்க முற்படும் ஒரு சிலரால் அதனை முன்கொண்டு செல்வதில் குழப்ப நிலை காணப்படுகின்றது.

தமிழினத்திற்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்ற முனைப்புக் காணப்பட்டாலும் சரியான திட்டம் இன்மை, பேரினவாத சூழ்ச்சிகளுக்குள் சிக்கியிருத்தல், அதிகாரத்தை மட்டும் நோக்காகச் செயற்படுதல் போன்ற நிலைகளை குறித்த சக்திகள் கையிலெடுத்திருக்கின்றன. இதனால் எமது இனத்திற்குள்ளேயே மக்கள் மத்தியில் பிரிவினை நிலை ஏற்படுவதற்கான அபாய சூழலும் ஏற்பட்டிருக்கின்றது. சிதறிக்கிடக்கும் எமது இனத்தினை ஒன்று திரட்டி ஒரே வழியில் பயணிக்கச் செய்யவும், போலிகளை அம்பலப்படுத்தவும் வேண்டிய தேவை நேர்த்தியான ஊடகங்களுக்கும் ஊடகர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

களச்சூழலைக் கருத்தில் எடுத்து தமிழ்லீடர் என்கின்ற இணைய ஊடகம் உங்கள் முன் விரிகிறது. உண்மையின் எல்லைவரை செல்வோம் என்ற ஆசிரியர் பீடத்தின் கொள்கையுடனும் தேசியம் தொடர்பிலான தளராத உறுதியுடனும் நேர்த்தியான பார்வையுடனும் தமிழ்லீடரின் படைப்புக்கள் முன்வைக்கப்படுகின்றன. வாசகர்கள் ஒவ்வொருவரையும் தமிழ்லீடர் தனது இணையத்திற்கான பங்காளிகளாகவே கருதுகிறது. சுட்டிக்காட்டப்பட வேண்டிய குற்றங்கள், நிவர்த்திக்கப்படவேண்டிய குறைகள் தொடர்பில் தமிழ்லீடருக்கு எழுதுங்கள். ஆதாரப்படுத்தல்களின் பின்னர் அவற்றை பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் இணையத்தளங்களின் வருகை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் படைப்புக்களை பிரதியீடு செய்து மீள்பிரசுரம் செய்யும் நடவடிக்கைளும் அதிகரித்தே வருகின்றன. செய்திகள் எனும் போது அவை பொதுவானவை என்பதால் அதனை விடுத்தாலும் படைப்புக்களை மீள்பிரசுரம் செய்வது தப்பானதல்ல ஆனாலும், அவற்றை மீள்பிரசுரம் செய்பவர்கள் அவற்றின் மூலத்தினை தங்கள் இணையங்களிலோ ஊடகங்களிலோ குறிப்பிடவேண்டும் என்று தமிழ்லீடர் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தாயகத்திலும், புலத்திலும் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பிலான பதிவுகளை தமிழ்லீடர் மின் அஞ்சல் ( [email protected] ) ஊடாக அனுப்பிவைத்து உதவமுடியும். அதேபோல இணையம் தொடர்பிலான திறந்த விமர்சனங்களையும் தமிழ்லீடர் எதிர்பார்க்கின்றது. தேசியத்தை வென்றெடுக்கும் தளராத பயணத்திற்கு வாசகர்கள் அனைவரது ஒத்துழைப்பையும் தமிழ்லீடர் எதிர்பார்த்துநிற்கிறது.

தொடர்புகளுக்கு..

மின்னஞ்சல்: [email protected]
Skype: tamilleader