எவரையும் விலக்க முடியாது – கஜேந்திரகுமாருக்கு குட்டுவைத்த பேரவை

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது.

இதனால், குறித்த இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும் இருக்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் 10-12-2018 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சீ.வீ. விக்கினேஸ்வரன் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பேரவையின்  கூட்டத்தின்போது பேரவையில் இருந்து சில கட்சிகளை வெளியேற்ற வேண்டுமென ஒரு கட்சி விடுத்த கோரிக்கை தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு சுமூகமான முடிவிற்கு நாங்கள் வந்துள்ளோம். இதனடிப்படையில் பேரவைக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் இத்துடன் நீங்குமென்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

பேரவையில் இருந்து இரண்டு கட்சிகளை வெளியேற்ற வேண்டுமென ஒரு கட்சி கோரியிருந்த நிலையில் அந்த இரு கட்சிகளதும் விளக்கமும் கோரப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்றைக்கு இது சம்மந்தமாக இரு தரப்பாரும் தங்களுடைய விளக்கத்தை அறியத் தந்ததால் அதனை ஏற்றுக் கொள்வதென ஒரு முடிவிற்கு நாங்கள் வந்திருக்கின்றோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: