கிராம சக்தி வேலைத்திட்டம் பயிற்சிச் செயலமர்வு!

ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் கிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக பிரதேச ரீதியாக பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வொன்று நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தின் போது, கிராம சக்தி வேலைத்திட்டம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதன் ஆரம்ப நிகழ்வில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம உள்ளகக்கணக்காளர் திருமதி இந்திரா மோகன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

தற்போது கிராம மட்டத்தில் நடைபெற்றுவரும் கிராம சக்தி மக்கள் சங்கங்களின் செயற்பாடுகள், திட்டத் தெரிவு, செயற்படுத்தல், எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 கிராம சக்தி மக்கள் சங்கங்கள் கம்பனிகளாக பதிவு செய்யப்பட்டு அவற்றுக்காக 10 லட்சம் ரூபா வீதம் நிதிகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து வாழ்வாதாரம், ஆற்றல் விருத்தி, உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தல் என்பன செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டம் நடைபெறும் கிராமங்களில் மக்கள் சங்கம் உருவாக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான திட்டங்களை இனங்கண்டு செயற்படுத்தி மக்கள் பயனடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் செயப்பாடாகும்.

ஓவ்வொரு கிராம மக்கள் அமைப்புகளுக்கும் 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆற்றல் மேம்பாட்டுக்காக 30 சதவீதமும் பிரதேசத்தின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதற்கு மிகக்குறைந்த வட்டியில் வாழ்வாதார கடன்கள் வழங்க 50 சதவீதமும் உட்கட்டுமானத்துக்கு 20 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கிராம சக்தி என்ற கிராமத்தை வலுவூட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வறுமையை ஒழித்து கிராமத்தை அபிவிருத்தி செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கியநோக்கங்களாகும்.

கிராம மட்டத்தில்  வாழ்வாதார மேம்படுத்தல், ஆற்றல் விருத்தி, உட்கட்டமைப்பு மேம்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இந்த வேலைத்திட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.  2020 ஆம் ஆண்டில் 5000 கிராமஉத்தியோகத்தர் பிரிவுகளில் வறுமை ஒழிப்பினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாக கிராம சக்தி வேலைத்திட்டம் செயப்படுத்தப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக 20ஆம் திகதி வியாழக்கிழமை ஆயிரம் கிராமங்களின் திட்டங்கள் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: