தமிழ்லீடர்

சிட்னித் தமிழர்களின் உதவியுடன் தொடரும் கனகபுரத் துயிலுமில்லப் புனரமைப்பு

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தின் தெற்குப் பக்க மதில் அவுஸ்திரேலியா சிட்னி வாழ் தமிழர்களின் நிதிப் பங்களிப்புடன் கனகபுரம் மாவீரர் பணிக்குழுவின் செயலாளர் குமாரசிங்கம் அவர்களின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

துயிலுமில்லப் புனரமைப்புத் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த குமாரசிங்கம் “கனகபுரம் துயிலுமில்லம் மட்டுமல்ல எமது தாயகத்தில் திட்டமிட்டு சிதைக்கப்பட்ட நிலையில் காணப்படும் 30 க்கும் மேற்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களின் கட்டுமானப் பணிகளையும் பொறுப்பேற்று எமது வீரர்களின் நினைவாலயங்களின் மீட்புக்கு துணை நிற்குமாறு” புலம் பெயர் உறவுகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

ஊடகவியலாளர் சந்திப்பில் கனகபுரம் துயிலுமில்ல மாவீரர் பணிக்குழுச் செயலாளர் குமாரசிங்கம்

துயிலுமில்லப் புனரமைப்புத் தொடர்பாக  தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட மாவீரர் கப்டன் காந்தரூபனின் தந்தை:

சிட்னி தமிழர்களின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட கனகபுரம் துயிலுமில்ல தெற்குப் பக்கத் தோற்றம்

 

இது தொடர்பாக கனகபுரம் துயிலுமில்லப் பணிக்குழுவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய எம் இனிய தாயக புலம்பெயர் உறவுகளே!

மாவீரர்கள் தமிழ்த்தேசிய பேரினத்திற்கு சொந்தமான அழியாத சொத்துக்கள். என்றுமே மறக்கமுடியாத நினைவுக் கோபுரங்கள் .தமிழர்களை உலகம் ஏற்றுக் கொள்ள விதையாகிப் போன வீரர்கள், அவர்கள் துயில்கின்ற இல்லங்கள் போற்றி வணங்க வேண்டிய தமிழர்களின் கோயில்கள்.

எமது அன்பான உறவுகளே!

2009க்கு பின்னர் நாம் காலங்காலமாக போற்றி வழிபட்டு வந்த எமது மாவீரத்தெய்வங்களின் நினைவாலயங்கள் முற்றாக சிதைத்தழிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.

தொடர்ச்சியாக இன நீதிக்காகவும் இன விடுதலைக்காகவும் அரசியல் வழிநின்று போராடிக்கொண்டிருக்கும் நாம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமக்கே உரித்தான எமது பூர்வீக அடையாளங்களையும் எமது மாவீர்களது நினைவாலயங்களையும் பாதுகாத்து எமது அடுத்த சந்ததிக்கு எமது வரலாற்றைக் கடத்த  வேண்டிது ஒவ்வொரு தமிழரினதும் தார்மீகக் கடமையாகும்.

இவ்வகையில் கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் முதற் கட்டமாக சுற்று மதில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ் இல்லத்தின் பின்புற மதில் கௌரவ யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கட்டி முடிக்கப்பட்டிருந்தது தாங்கள் யாவரும் அறிந்ததே.

தற்போது இதன் தெற்குப் பகுதி ( முறிப்பு பக்கம்) மதிலமைக்கும் பணிகளினை கனகபுரம் மாவீரர் பணிக்குழுவினராகிய எங்களின் வேண்டுகோளின் அடிப்படையில் அவுஸ்திரேலிய சிட்னி  தமிழர்களினால் பொறுப்பேற்கப்பட்டு 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மதில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.  இதன் தொடர்ச்சியாக பூச்சு மற்றும் வர்ணம் பூசும் பணிகள் மீதமுள்ளன. இப் பணிகளை எதிர்வரும் ஓரிரு வாரங்களில் பூர்த்தி செய்து தருவதாக அவுஸ்திரேலிய சிட்னி  உறவுகளினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எமது வேண்டுகோளை உளப்பூர்வமாக ஏற்று தெற்குப்பகுதி மதில் கட்டுமானப்பணியினை பூர்தியாக்கித் தந்த அவுஸ்திரேலிய சிட்னி தமிழ் உறவுகளுக்கு எமது நன்றிகளையும் அன்பினையும் பரிமாறிக் கொள்வதில் மன நிறைவடைகின்றோம்.

கட்டுமானப் பணிகளின் தொடர்ச்சியாக மீதமுள்ள இரு பக்க மதில்களை கட்டியெழுப்புவற்கு புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் எமது உறவுகள் கட்டுமானதாரர்களை நேரடியாக பணிக்கமர்த்தி கட்டுமானப் பணியினை பூர்த்திசெய்து தருமாறு அன்புரிமையோடு வேண்டிக்கொள்வதோடு,

எமது தாயகத்தில் திட்டமிட்டு சிதைக்கப்பட்ட நிலையில் காணப்படும் 30 க்கும் மேற்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களின் கட்டுமானப் பணிகளையும் பொறுப்பேற்று எமது வீரர்களின் நினைவாலயங்களின் மீட்புக்கு துணை நிற்குமாறும் பேரன்போடு வேண்டி நிற்கின்றோம்.

நன்றி

மாவீரர் பணிக்குழு

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

கிளிநொச்சி

Add comment

Recent Posts

%d bloggers like this: