தமிழ்லீடர்

சிட்னியில் சரவணபவன் – துரோகத்துக்கு துணைபோன ஊடகம் – நடந்தது என்ன?

கடந்த ஜனவரி 26 சிட்னியில் கேணல் கிட்டு ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா வழமையாக நடை பெறும் துங்காவி பினலோங் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை யாழ்மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சமூகமளித்து இருந்தார் . ஒழுங்கு படுத்தல் தரப்பினரால் எந்த பிரத்தியேக அழைப்பும் வழங்கப்பட்டு இருக்கவில்லை .

சரவணபவனை அழைத்து வருவது தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவுஸ்திரேலியா அமைப்பாளர் அருண் அருந்தவராஜா  தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் ஜனகனிடம் கேட்டபோது,

‘சரவணபவன் தற்போது எமது மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பவராக செயற்படவில்லை  மக்களின் உணர்வுகளுக்கு  எதிர்மாறாகவே செயல்பட்டு வருகின்றார் ஆகவே இனத்துக்கு விரோதமாக செயற்படும் சரவணபவனை இந் நிகழ்வுக்கு அழைத்துவருவது  எதிர்ப்பையே உருவாக்கும்’ எனக் குறிப்பிட்டார்.  அதற்கு தாங்கள் பொது மக்கள் வருவதுபோல் வந்து செல்கிறோம் என அருண் பதிலளித்திருந்தார். தமிழர் விளையாட்டு விழாவிற்கு தங்களை வரவேண்டாம் என்று  மறுப்பதற்கான உரிமை இல்லை ஆனால் சரவணபவான் வருகையால் ஏதாவது அசாம்பாவிதம் நடந்தால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பேற்காது என்பதை ஜனகன் தெரிவித்திருந்தார்.

சரவணபவன் மற்றும் அவரது பாரியாரை அழைத்துக்கொண்டு அருண் அவர்கள் மைதானத்துக்குள் நுழைந்த வேளை எவருமே அவர்களை ஏறெடுத்துப்பார்க்கவில்லை.  அதேவேளை ஒழுங்கமைப்பாளர்களால் கொட்டகை அமைத்து வசதிகள் ஏற்படுத்தி ஒலிபரப்பு நடத்த அனுமதிக்கப்பட்ட தாயகம் வானொலியினருக்கு சரவணபவனை அங்கே வைத்து பேட்டிகள் எதுவும் எடுக்கவேண்டாம் என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தது ஆனால் அதையும் மீறி சரவணபவனைப் பேட்டியெடுத்து அவரை அந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக்கும் கைங்கரியத்தை தாயகம் வானொலியின் அறிவிப்பாளர் சத்தியபாலனும் வானொலியின் இயக்குனர் விஜயும் செய்தனர். அவ்வேளை மீண்டும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளைத் தலைவர் அருண் அருந்தவராஜாவிடம் சரவணபவனை நிகழ்வு ஏற்பாட்டுக் கொட்டகைப் பகுதியிலிருந்து அழைத்துச் செல்லுமாறும், தாயகம் வானொலியின் இயக்குனர் விஜயிடம் பேட்டியை நிறுத்துமாறும் வினயமாக  வேண்டினார். ஆனால் அதைக் காதுகொடுத்துக் கேளாமல் துரோகத்தால் மடிந்த மாவீரர்களின் நிகழ்வில் துரோகிக்கு வெளிச்சம் பாய்ச்சும் நடவடிக்கையை தாயகம் வானொலியும் அருண் அருந்தவராஜாவும் தொடர்ந்துகொண்டிருந்தனர்.  அவ்வேளை  அங்கிருந்த சிலர் துரோகியைப் பேட்டி எடுப்பதை நிறுத்துங்கள் இல்லாவிடில் கலையகத்தை வெளியே எடுத்துச் செல்லுங்கள் என தாயகம் வானொலியை நோக்கியும் தமிழர்களின் வாக்குகளை வாங்கிவிட்டு தமிழருக்கு துரோகம் செய்யும் உங்களுக்கு இங்கே இடமில்லை என சரவணபவனை நோக்கியும் உரத்த குரலில் கூறினார்கள்.

தாயகத்தில் தேர்தல் காலத்தில்        வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டித் தீர்வு, இனவழிப்புக்கு எதிராக விசாரணை வேண்டும் என்பன உட்பட தமிழர் உரிமைக்கான கோசங்களை  எழுப்பி தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்று. பின் நாட்களில் எந்த அரசுக்கு எதிராக கோசம் இட்டு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றாரோ அந்த அரசுக்கு ஆதரவளித்து  மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் மௌனம் காத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சரவணபவனும் ஒருவர்.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு யுத்தத்தில்  எம் மக்கள் வகை தொகை இன்றி கொல்லப்படும் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரியை அழைத்து தனது மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்தியவர் சரவணபவன். டக்ளஸ் கருணா போன்றே எம் மக்களுக்கான துரோக செயல்பாட்டில் சுமந்திரனுடன் இணைந்து செயற்பட்டு வருபவர் இந்தச் சரவணபவன். யாழ்ப்பாணத்தில் சப்றா என்ற பெயரில் நிதி நிறுவனம் நடாத்தி பல ஏழைகளின் பணத்தை ஏமாற்றி அவரிகளின் வாழ்வை அழித்து தன் வாழ்வை உயர்த்திக்கொண்டவர் சரவணபவன்.

இப்படியான  ஒருவரை நிகழ்வுக்கு அழைத்து வந்து தமிழீழத் தேசியக் கொடிக்கு முன்னால் படம்  எடுக்க வைத்து   நிகழ்வரங்கில் உள்ள வானொலிக் கலையகத்தில் வைத்து அவரைப் பேட்டி எடுத்து அவருக்கு கௌரவம் அளிக்க முயன்றனர்   அருண் அருந்தவராஜாவும் தாயகம் வானொலியின் இயக்குனர் விஜயும்.

அதற்கான எதிர்ப்பை அன்றே தெரிவித்துவிட்டு அமைதியாக இருந்த வேளை தாயகம் வானொலியின் இயக்குனர் விஜய் அவர்கள் தனது நண்பர் ஒருவரின் ஊடகம் மூலம் பொய்க் கதைகளை அவிழ்த்துவிட்டுள்ளார். அன்று நடைபெற்ற சம்பவத்துக்கு  சரவணபவனிடமும் தாயகம் வானொலியிடமும் நிகழ்வு நடைபெற்ற இடத்தில் வைத்து சில செயற்பாட்டார்கள் மன்னிப்புக்கோரியதாக ஒரு பொய்யையும், இச் சம்பவத்திற்கு முறைப்படி தங்களிடம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மன்னிப்புக் கேட்கும் படி உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்தியதாக இன்னொரு பொய்யையும் கூறியுள்ளார். ஆனால் இது தொடர்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வட்டாரங்களில் வினவியபோது தாங்கள் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை என்றும்  தங்களிடம் தாயகம் வானொலி மன்னிப்புக் கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை என்றும் உறுதியாகத் தெரிவித்தனர்.

“துரோகத் தனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக துரோகத் தனத்துக்கு துணைபோனவர்களிடம் ஏன் மன்னிப்பு  கேட்கவேண்டும்” என்றார் அன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவர்.

இச் சம்பவத்திற்காக, தான் நினைத்திருந்தால் அவுஸ்திரேலியாக் காவல் துறையிடம் முறைப்பாடு செய்திருக்க முடியும் என்கிறார் தாயகம் வானொலியின் இயக்குனர் விஜய். சுமந்திரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை காவல்துறையை வைத்து வெளியேற்றிய அருண் அருந்தவராஜாவிடம் இருந்து வந்த ஆலோசனையாகவும் இது இருக்கலாம்.

“பொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடத்தப்படுகின்ற சிங்களத்தின் விசமத்தனமான கருத்துப் போரை முறியடிப்பதே இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் முக்கியமான சவாலாகும்”  என்றார் எமது தேசியத் தலைவர் ஆனால் இன்றோ புலம்பெயர்ந்த தேசங்களில் பொய்களையே ஆயுதமாகக் கொண்டு இயங்கி தேசியவாதிகள் என்ற போர்வையில் துரோகிகளுக்கு ஆதவளிக்கும் தாயகம் போன்ற வானொலி வியாபாரிகளின் கருத்துப்போரையும் முறியடிப்பதும் எமக்கு மேலதிக சவலாக உள்ளது.

Add comment

Recent Posts

%d bloggers like this: