தமிழ்லீடர்

சைக்கிள்-வீணை கூட்டு! விக்கியைப் பயன்படுத்த முயலும் கஜேந்திரகுமார்!

ஈ.பி.டி.பியின் ஆதரவை எதிர்பார்த்தே தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் மாநகரசபை முதல்வர் பதவிக்கு போட்டியிட்டதென கூறியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

முதலமைச்சரை பயன்படுத்து, எதிர்கால தலைமை தங்களிடம் மட்டுமே வர வேண்டுமென முயற்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

வாரஇதழ் ஒன்றிற்கு அளித்த நேர்காணலொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளாார்.

முதலமைச்சரின் அணியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் இணையக்கூடாதென முன்னணி கூறி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த போது-

“முதலமைச்சர் ஆரம்பிக்கக் கூடிய கூட்டு முன்னணியில் நாங்கள் வரலாம், சித்தார்த்தன் போன்றவர்கள் வரலாம். அல்லது முதலமைச்சர் சொன்னது போன்று தமிழரசுக் கட்சியினரும் வரலாம். கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வரலாம் வேறு யாரும் வரலாம் என்று விக்னேஸ்வரனே சொல்லியிருக்கின்றார்.

அவ்வாறான கூட்டு முன்னணி உருவானால் எதிர்காலத்தில் முதலமைச்சர் அரசியலில் இருந்து விலகினாலோ அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டாலோ அதற்குப் பிறகு அந்தத் தலைமைத்துவம் தங்களிடம் வராமல் வேறு யாரிடமாவது போய்விடலாம் என்பதே அவர்களுடைய மிகப் பெரிய பிரச்சனை. இதனையே அவர்கள் ஊடகங்களுக்கும் சொல்லியிருக்கின்றனர்.

எதிர்காலத்தில் தங்களிடம் தலைமைத்துவம் வராமல் போய்விடும் என்பதனை விட வேறு எந்தப் பிரச்சனைகளும் நிச்சயமாக அவர்களுக்கு கிடையாது. ஆகவே சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் வரக் கூடாது, ஏனைய எவரும் வரக் கூடாது. நாங்கள் மாத்திரம் தான் முதலமைச்சருடன் போக வேண்டும். முதலமைச்சர் ஒரு ஐந்து வருட காலத்திற்குப் பிற்பாடு அவர் ஓய்வு பெற்றுவிட்டால் தலைமைத்துவம் தங்களிடம் இருக்கும். ஆகவே அவரை வைத்துக் கொண்டு தங்களது பிழைப்பை எப்பிடி செய்து கொள்வது இது தான் அவர்களின் நோக்கம்.

இந்த விசயத்தை நேரடியாக மக்களுக்குச் சொல்ல இயலாத காரணத்தினால் எங்களுக்கு மேல் அர்த்தமில்லாத உப்புச்சப்பில்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் ஒரு ஊடக செய்தியில் கூட மிக ஆக்ரோசமாக அவர் பேசுவதை தொலைக் காட்சியில் பார்த்தேன். ஆனால் அந்த ஆக்ரோசத்தில் உண்மைகள் எதுவும் இல்லை என்பது தான் நிதர்சனமானது“ என்றார்.

இதேவேளை, வவுனியாவில் தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டு வைத்து உள்ளூராட்சிசபைகளை கைப்பற்றியதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் தொடர்ந்து சுமத்தி வருவது பற்றி கேள்வியெழுப்பப்பட்டபோது பின்வருமாறு பதிலளித்திருந்தார்.

“இதற்கு பலமுறை பதிலளித்து விட்டேன். ஆனால் அவர்கள் ஒரே பல்லவியைத் தான் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றார்கள். யாழ்ப்பாண மாநகர சபைக்கு மணிவண்ணணை நகரபிதா ஆக்க வேண்டுமென்று அவரைத் தேர்தலில் நிறுத்தினார்கள். அப்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈபிடிபி அல்லது தமிழரசுக் கட்சியிடமிருந்து தங்களுக்கு தேவையான அளவிற்கு ஆதரவு கிடைக்குமென்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

அதற்கு முன்பாக அவர்கள் இரகசியக் கூட்டமொன்றையும் நடத்தி அந்த இரகசியக் கூட்டத்தில் ஈபிடிபியின் ஆதரவு கிடைக்குமென கஜேந்திரன், கஜேந்திரகுமார் பேசியிருந்தார்கள். அங்கு வேறு ஒரு சிலர், அப்படிப் போவது தவறு என்று அதனை எதிர்த்தும் இருந்தார்கள். ஆனாலும் பிறகு மாநகர முதல்வருக்காக மணிவண்ணன் போட்டியிட்டு, தோல்வியடைந்தார்.

ஏனெனில் ஈபிடிபியோ தமிழரசுக் கட்சியோ அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. அதன் காரணமாகத் தோல்வியடைந்தார்கள். அவ்வாறு தோல்வியடைந்ததற்குப் பிற்பாடு அவர்கள் இப்பொழுது எங்கள் மேல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றார்கள். ஆனால் அவர்கள் போட்டியிட்டதை போலவே, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் இரண்டு இடங்களில் தவிசாளருக்காக போட்டியிட்டது.

எங்களுக்கு குறைந்தளவிலான எண்ணிக்கையான இடங்கள் தான் அங்கு இருந்தது. நாங்கள் வெல்ல மாட்டோம் என்பதும் உறுதியாக இருந்தது. ஆனால் நாங்கள் வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கவில்லை. அப்படியிருந்தும், நாங்களும் தேர்தலில் நிற்பது என்றும், யாரிடமும் வாக்குக் கேட்டுப் போவதில்லை என்றும், யாராவது விரும்பினால் எங்களுக்கு வாக்களிக்கலாம் என்ற நிலைப்பாட்டையெடுத்தோம்.

நெடுங்கேணியில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். அதேபோல வவுனியா நகர சபைக்கு வாக்களித்தார்கள். அதில் அற்ப சொற்ப நிலையில் நாங்கள் வெற்றியடைக் கூடிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது. இதனுடைய பொருள் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து விட்டோமென்பது அல்ல.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்கு ஒரு பொருள் இருக்க வேண்டும். நீங்கள் என்ன மாதிரி யாழ் மாநகர சபையில் போட்டியிட்டிர்களோ அதே போன்று தான் நாங்களும் இரண்டு சபைகளில் போட்டியிட்டோம். ஒரு சபையில் உங்களைப் போன்றே நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். இன்னொரு சபையில் நாங்கள் வென்றோம். இதுதான் நடந்த விடயங்கள்.

 

நன்றி: தமிழ்ப்பக்கம்

Add comment

Recent Posts

%d bloggers like this: