தமிழ்லீடர்

சைப்ரஸ் நாட்டின் போலி கடவுச்சீட்டில் லண்டன் செல்ல முயற்சித்த மூன்று ஈராக் பிரஜைகள் கைது!

சைப்ரஸ் நாட்டின் கடவுச்சீட்டு போன்ற போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி, பிரித்தானியாவின் லண்டன் நகருக்கு செல்ல முயற்சித்த ஈராக் நாட்டை சேர்ந்த மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்களே, விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

35 வயதான கணவன், 33 வயதான மனைவி மற்றும் 7 வயதான அவர்களின் மகள் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும்,
இவர்கள் ஈராக்கில், இருந்து துருக்கியின் இஸ்தான்புல் சென்று, அங்கிருந்து துபாய் சென்றுள்ளதாகவும், கடந்த 11ஆம் திகதி துபாயில் இருந்து இலங்கை வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

சில நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த இவர்கள் போலி சைப்ரஸ் கடவுச்சீட்டை பயன்படுத்தி, இன்று மதியம் 1.05 அளவில் லண்டன் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஈராக் பிரஜைகள் விமானத்தில் ஏற தயாரான போது, அவர்களின் கடவுச்சீட்டு போலியானது என அறிந்துக் கொண்ட அதிகாரிகள், உடனடியாக செயற்பட்டு அவர்களை தடுத்து நிறுத்தி
விசாரணைகளை மேற்கொண்டதில், இவர்கள் இலங்கைக்கு வர பயன்படுத்திய ஈராக் கடவுச்சீட்டு பயணப் பொதியில் இருந்து அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அரசியல் புகலிடம் பெறும் நோக்கில், ஈராக் பிரஜைகள் அங்கு செல்ல முயற்சித்துள்ளதாகவும், இந்த ஈராக் பிரஜைகள் லண்டன் சென்றிருந்தால், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், லண்டன் விமான நிலையத்திற்கு 60 இலட்சம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டிருக்கும், என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

Add comment

Recent Posts

%d bloggers like this: