ஜனாதிபதியை பாராட்டிய-கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கன. இந்த விடயத்தில் அவர் கொண்டுள்ள உறுதியும் அதிரடியும் பிரமாதம். குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் தற்போது போதைப்பொருள் செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றன.

எனினும் அவற்றை ஒழிப்பதற்கும் ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இவ்விடயத்தில் பிரதான பொலிஸ் அதிகாரியாகச் செயற்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப்புக்கு சேவை நீடிப்பை வழங்கியுள்ளமையும் வாழ்த்துக்குரியது என கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட் தெரிவித்தார். 

மேலும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கு இன்று கடிதம் மூலம் பாராட்டியுள்ளார்.இது தொடர்பில் மேலும் அவா கூறியதாவது,“போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள் என்பன முன்னெப்போதும் இல்லாதவாறு சமீபகாலத்தில் பெருமளவு அதிகரித்திருக்கின்றன.

மேலும் தென்கிழக்கு ஆசியாவிலேயே போதைப் பொருட்களின் முக்கிய மையமாக இலங்கை ஆகிவிட்டதோ என எண்ணுமளவில் பெருந்தொகையான போதைப்பொருட்கள் தொடர்ந்தும் நாடெங்கிலும் கைப்பற்றப்பட்டு வருகின்றன.ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தச் செயற்பாடுகள் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

எனினும் இந்த விடயத்தில் ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள் மிகவும் பாராட்டப்பட வேண்டிய அம்சமாக இருக்கின்றன.நாட்டுக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய தீங்கை விளைவித்து வரும் இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி அதனோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு அதியுச்ச தண்டனையை வழங்க வேண்டும் என ஜனாதிபதி எடுத்திருக்கும் முடிவுக்கு நாட்டின் மீதும் மக்களின் நலன்கள் மீதும் ஆர்வம் கொண்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்குவர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தற்போது போதைப்பொருட்களின் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.எனவே, இவ்விடயத்தில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: