தமிழ்லீடர்

ஜெனீவா செல்லும் குழுவில் இருந்து விலகினார் மஹிந்த சமரசிங்க!!!

ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது ஏட்டிக்குப் போட்டியாக இருவேறு குழுவினர் செல்லவிருந்த நிலையில் தற்போது ஒரே குழுவாக ஜெனீவாவுக்கு செல்வதற்கு ஐந்து பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில் இந்த முறை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சார்பில் ஐவரடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று செல்லவுள்ளது.

மேலும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சார்பில் ஒரு குழுவை அனுப்புவதற்கு தீர்மானித்த நிலையில், ஏட்டிக்குப் போட்டியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான மற்றொரு குழுவை தயார்படுத்தியிருந்தார்.

எனினும் ஸ்ரீலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விளக்கங்களை அளிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்வதற்காக விசேட தூதுக் குழுவொன்று ஜெனீவாவுக்கு செல்லவுள்ளதாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் தெரிவித்திருந்தார். 

எனவே வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், முன்னாள் மனித உரிமைகள் அமைச்சரும், சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம ஆகியோரை ஜெனீவாவுக்கு அனுப்பிவைப்பதாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஊடகப் பிரதானிகள் மற்றும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது கூறியிருந்தார்.

அத்துடன் இந்த குழு, ஸ்ரீலங்காவின் பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்ள அனுமதிக்குமாறு மனித உரிமைகள் பேரவையிடம் கேட்டுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எவ்வாறெனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவை ஜெனீவாவுக்கு அனுப்புவதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்டிருந்தார். 

எனினும் இந்த குழுவானது 2015ஆம் ஆண்டு, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு மேலும் கால அவகாசத்தை கோரும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து முன்னாள் மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க விலகியுள்ளார். இதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் ஐவரடங்கிய குழுவொன்று ஸ்ரீலங்கா சார்பாக ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நெரின் புள்ளே ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஸ்ரீலங்கா தொடர்பான விவகாரம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: