ஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – சுரேன் ராகவன்

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையராகிய நாமே நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநரின் கொழும்பு கிளை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கை அரசாங்கம் ஜெனிவாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்தத் தவறிவிட்டது என்று குறிப்பிடும் தரப்பினர் சர்வதேச நீதிப் பொறிமுறையினை நாட முயற்சிக்கின்றமை நாட்டுக்கு எதிரான செயற்பாடாகும்.

எமது நாட்டின் நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையில் இருந்து நீதித்துறையின் தனித்தன்மை பேணப்பட்டுள்ளது.

ஆகவே சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கும் முயற்சிகள் சாத்தியமற்றது. பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நாட்டின் சுயாதீனதன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிறைவேற்றப்படும். இதற்கு எந்தத்தரப்பினரும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய தேவையில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: