தொழிலாளர் குடியிருப்பு 24 வீடுகள் தீக்கிரை;

அட்டன் – போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில், நேற்றுக்காலை 6.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகிவிட்டது.

அத்துடன்,  தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்துள்ளது, இந்த வீடுகளில் குடியிருந்த 19 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து, அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அட்டன் பொலிஸார், அட்டன் – டிக்கோயா நகர சபை தீயணைப்பு படையினர், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர், பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 மணித்தியாலயங்களின் பின்  தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சில வீடுகளில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள், தற்காலிகமாக போடைஸ் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான நிவாரண உதவிகள், தோட்ட நிர்வாகம், நோர்வூட் பிரதேச சபையினர், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்  கண்டறியப்படவில்லை என அட்டன் பொலிஸார்,  தெரிவித்துள்ளார்கள். அட்டன் பொலிஸ் கைரேகை  அடையாளப் பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.                         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: