தமிழ்லீடர்

நெடுந்தீவு கடல்பகுதியில் கடற்படைப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு மோதல்.

நெடுந்தீவு கடற்பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு 500 தமிழக மீன்பிடிப் படகுகள் ஊடுருவி மீன்பிடித்துக் கொண்டிருந்தன.அப்போது சிறிலங்கா கடற்படையின் ஷங்காய் வகையைச் சேர்ந்த ரணஜய என்ற அதிவேக பீரங்கிப் படகு, தமிழக மீன்பிடிப் படகுகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

மேற்படி நெடுந்தீவுக் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையின் போது, சிறிலங்கா கடற்படையின் அதிவேக பீரங்கிப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு ஒன்று மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக சிறிலங்கா கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்று, தமது அதிவேகப் பீரங்கிப் படகின் மீது வேண்டுமென்றே மோதியதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.இதில் கடற்படைப் படகுக்கு சேதம் ஏற்பட்ட அதேவேளை, மோதிய மீன்பிடிப் படகு, சேதமடைந்து கடலில் மூழ்கியது.அந்தப் படகில் இருந்த 4 மீனவர்களில் மூவர் சிறிலங்கா கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர். 

மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். சடலம் யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.தமிழக மீன்பிடிப் படகு வேண்டுமென்றே கடற்படைப் படகை மோதி சேதப்படுத்தியது என்றும், போர் நடந்த காலங்களில் கூட இதுபோன்று தமிழக மீன்பிடிப் படகு எதுவும், இவ்வாறு மோதியதில்லை எனவும் சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது.

எனினும் தமிழக மீனவர்களின் படகு மோதிய சிறிலங்கா கடற்படையின், உருக்கினால் தயாரிக்கப்பட்டது என்பதால், குறைவான சேதமே ஏற்பட்டது என்றும், அலுமினிய அடித்தளத்தைக் கொண்ட அதிவேகத் தாக்குதல் படகு மீது மோதியிருந்தால் பாரதூரமான சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் கூறியுள்ளன.

அதேவேளை, இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அப்பால், இயந்திர அறையில் நீர்க்கசிவு ஏற்பட்டதால் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றொரு படகில் இருந்த 5 தமிழக மீனவர்களையும், தாங்கள் கைது செய்ததாகவும், அந்தப் படகு மூழ்கி விட்டதாகவும் சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது.

மேலும் நெடுந்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு மோதிய சம்பவம் வடக்கு கடற்பகுதியில் புதிய அச்சுறுத்தல் என்றும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

இதனிடையே, நெடுந்தீவு கடல்பகுதியில் கடற்படைப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு மோதிய சம்பவம் தொடர்பாக, விரிவான விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், இது தொடர்பான காணொளிப் பதிவுகள் ஆராயப்படுவதாகவும் சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் கைது செய்யப்படுவதை தவிர்க்க, மோதலில் ஈடுபட முனையும் தமிழக மீனவர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாகவும் சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது.

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: