தமிழ்லீடர்

பாதாள உலக குழு தலைலவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்ட 25 பேர் கைது!!!

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைலவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மேற்படி வெளிவிவகாரம், பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்கள் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்தார்.

மேலும் போதைப் பொருள் வர்த்தகம் உட்பட நாட்டில் இடம்பெற்ற பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதூஸ் டுபாயிலுள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

அவருடன் நான்கு பாதாள உலக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 25 பேர் மடக்கிபிடிக்கப்பட்டனர். கைதானவர்களில் இலங்கை பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதுதவிர, பாதாள உலக குழு உறுப்பினர்களான கெசல்வத்தே தினுக, கஞ்ஜிபானி இம்ரான், ரனாலே சூட்டா மற்றும் அங்கொட சுத்தா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

தனி விமானமொன்றின் ஊடாகவே இவர்கள் நாட்டுக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இவர்கள், ஏதேனுமொரு வழியிலும் தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாதாள உலக குழு தலைவர் யார்? மற்றும் அவருடைய சகாக்களுடன் அவர் எவ்வாறு கைதானார் என்பது குறித்து தெரியவரகையில்,

தனது இரண்டாவது மனைவியின் முதலாவது குழந்தையினது முதல் பிறந்த நாளை கொண்டாட சென்ற போதே பாதுகாப்பு தரப்பின் கைகளில் சிக்கிக் கொண்டார் பிரபல பாதாள உலக முக்கிய புள்ளி மாகந்துர மதுஷ்.

எனினும் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற பிரபல பாடகர் அமல் பெரேரா, அவரது புதல்வரும் பாடகருமான நதீமால் , நடிகர் ரயன் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் இருவர் உட்பட்ட 25 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டப்படி இவர்களை நாடுகடத்த முடியாதென்று சொல்லப்படுகிறது. ஆனால் அரபு நாட்டின் சட்டங்கள் இவர்கள் மீது பாயலாம். எனினும் ஜனாதிபதி மைத்ரி இந்த விடயத்தில் கடும்போக்கில் இருப்பதால் இவர்களை இலங்கைக்கு கொண்டுவர இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே இதற்கென விசேட குழுவொன்று கொழும்பில் இருந்து டுபாய் நோக்கி செல்லவுள்ளது. அதேவேளை, 2006 ஆம் ஆண்டளவிலேயே பாதாள கோஸ்டி செயற்பாடுகளுக்கு மதுஷ் வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு முதல் படுகொலையை செய்துள்ளார்.

சுமார் 50 மனிதப்படுகொலைகளுடன் இவர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: