பிரதமர் விடுத்த அழைப்பினை முஸ்லிம் தலைவர்கள் நிராகரித்தனரா?

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் Bourke வீதியில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து கருத்து தெரிவித்த பிரதமர் Scott Morrison- முஸ்லிம் சமூக தலைவர்கள் தங்களது சமூகத்திலுள்ளவர்கள் இவ்வாறான தீவிர சிந்தனைகளுக்குள் கவரப்படுவது குறித்து கூடுதல் பொறுப்போடு செயற்பட்டு, வன்முறைகள் வெடிப்பதற்கு முன்னரே அவற்றை தடுக்கும் வகையில் செயற்படவேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் Scott Morrison வெளியிட்ட கருத்துக்கள் முஸ்லிம் சமூக தலைவர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. தன்னோடு சந்திப்பொன்றில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் விடுத்த அழைப்பினை முஸ்லிம் தலைவர்கள் நிராகரித்து கடிதம் எழுதுமளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.

இதனை அடுத்து நேற்று வியாழக்கிழமை முஸ்லிம் சமூகத்தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்று இருந்தது. அந்த சந்திப்பில் தீவிரவாத சிந்தனைக்குள் கவரப்படுவது மற்றும் அதனை தடுப்பதற்கு சமூக மட்டத்தில் மேற்கொள்ளவேண்டியவை என்ன என்பது குறித்து கலந்தாலோசித்ததாக கூறப்படுகின்றது.

ஆனால், பிரதமரின் இந்த அழைப்பை நிராகரித்து முஸ்லிம் தலைவர்கள் ஒன்பது பேர் கைச்சாத்திட்டு ஒரு கடிதம்  அனுப்பி வைத்துள்ளனர் அதில்  – ஒரு சிலர் செய்கின்ற குற்றச்செயல்களுக்காக முழு சமூகத்தையே குற்றவாளிகளைப்போல விழித்துப்பேசும் பிரதமரின் போக்கும் சில அரச அமைச்சர்களின் கருத்துக்களும் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. 

இவை பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தை தனிமைப்படுத்துமே தவிர, பன்மைத்துவ பண்புகளை வளர்க்காது – என்று குறிப்பிட்டுள்ளனர். எனினும் தன்னுடனான சந்திப்புக்களை சில தரப்புக்கள் புறக்கணித்தாலும் திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெற்றதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: