தமிழ்லீடர்

மட்டக்களப்பு மேயருக்கு எதிராக காந்தி பூங்காவில் ஓட்டோ சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் நலன்புரிச் சங்கத்துக்கெதிராக, மட்டக்களப்பு மாநகர மேயர் செயற்படுவதைக் கண்டித்து, சங்கத்திலுள்ள ஓட்டோ சாரதிகள், இன்று காலை மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவில், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளரால் வழங்கப்பட்ட தரிப்பிட அனுமதியை மீளப் பெற வேண்டும், ஓட்டோ தரிப்பிடங்களில் எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் சங்க நிர்வாகத்துடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, ஓட்டோ சாரதிகளுக்கு எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது, ஓட்டோவின் நாளாந்த வரி பேசித் தீர்க்கப்படல் வேண்டும், சங்கத்தின் அனுமதியுடன் பதிவுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும், எனும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது சங்கத்தின் மேற்படிக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை, கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர், கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோருக்கு வழங்கவுள்ளதாக, மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஜேசுதாசன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சங்கத்திலுள்ள ஓட்டோ சாரதிகள், தமது ஓட்டோக்களை வீதியோரங்களில் நிறுத்தி விட்டு, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்,
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் சமுகமளித்து, இவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகக் கேட்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் சுமார் 763 ஓட்டோக்கள் சேவையில்  ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.         

Add comment

Recent Posts

%d bloggers like this: