தமிழ்லீடர்

மணல் ஏற்றி சென்ற டிப்பர்-முச்சக்கர வண்டி மோதல்

மட்டக்களப்பு பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்.

மூதூர் பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான மஹ்ரூப் மௌசூன் (29 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் – மட்டக்களப்பு பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், முச்சக்கர வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (11) இரவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், பெரிய பாலம், மட்டக்களப்பு, மூதூர் வீதியில் உள்ள பெற்றோல் விற்பனை நிலையத்திற்கு அண்மையில் மூதூரை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திச் சென்ற போது முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளாக தெரிவித்துள்ளனர்.

டிப்பர் வாகன சாரதி, முச்சக்கர வண்டியுடன் மோதிய பின்பு வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்தும் ஓட்டிச் சென்றதால் ஆத்திரமுற்ற பொது மக்கள் திரிசீடி சந்தியில் இருந்த பொலிஸ் காவலரனை உடைத்தெறிந்ததோடு வீதியை மறித்து டயர் போட்டும் எரித்தனர்.

இதன்போது மட்டக்களப்பு – மூதூர் வீதியில் ஸ்தம்பித்திருந்த வாகனப் போக்குவரத்து சில மணித்தியாலயங்களின் பின்பு வழமைக்குத் திரும்பியிருந்தது.

வாகன சாரதியை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

தூரப் பிரதேசங்களுக்கு மணலை எடுத்துச் செல்லும் டிப்பர் வாகனங்கள் ஏனைய வாகனங்களை முந்திக்கொண்டு வேகமாகப் பயணிப்பதால் இதற்கு முன்பும் இத்தைகைய விபத்துக்கள் பல ஏற்பட்டுள்ளன.

மூதூர் மற்றும் சேருவிலை பிரதேசங்களுக்கு மேற்குப் புறமாக உள்ள கங்கை ஆற்றிலும் அதன் அயல் பகுதியிலுள்ள விவசாயக் காணிகளிலும் முறைகேடாக இடம்பெற்று வரும் மணல் அகழ்வினால் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான டிப்பர்கள் மணல் எடுத்துச் செல்லும் செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

முறைகேடாக இடம்பெற்றுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு மூதூர் மற்றும் சேருவிலை பிரதேசங்களைச் சேர்ந்த சமூக நல அமைப்புக்கள் தொடராக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சில அரச அதிகாரிகளின் ஒத்துழைப்போடு முறைகேடான மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: