தமிழ்லீடர்

முதலைக்குடா மாணவர்கள்  தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் சேர்ந்து ஆர்ப்பாட்டம்!

மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்களும் மற்றும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தை இன்று காலை பாடசாலையின் வாயிற்கதவை மூடி பதாகைகளை ஏந்தியவாறு மேற்கொள்ளவுள்ளனர்.

இச்சம்பவம்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டி தற்போது கடந்த ஓரிரு தினங்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில்,
அதன் ஒருகட்ட விளையாட்டுப்போட்டி அருகிலுள்ள முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, மைதானத்திற்குள் திடீரென புகுந்த சிலர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் முதலைக்குடா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு மாணவர்கள் மீது  தாக்குதலை நடத்தியவர்களை உடன் கைது செய்யுமாறும், இவ்விடயத்தில் பொலிஸார் துரிதமாகச் செயற்பட வேணும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடத்திற்கு விரைந்த கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ்குழுவினர் நிலைமையை ஆராய்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி பாடசாலை மாணவர்களைத் தாக்கியவர்களை கைது செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த மாணவர்களை தாக்கியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், ஏனையவர்களும் கைது செய்யப்படுவார்கள் என மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்துல் வஹாப் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதிவழங்கு, மாணவர்களைத் தாக்கியவர்களை உடன் கைது செய், முன்னேறும் வலயம் இது முதுகில் குத்தாதே!, உள்ளிட்ட பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Add comment

Recent Posts

%d bloggers like this: