யாழில் கொடிய விஷப்பாம்புகள் அதிகரிப்பு! விவசாயிகள் அச்சத்தில்!

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியிலுள்ள வயல் ஒன்றில் இன்றைய தினம் புடையன் பாம்பு ஒன்று பதுங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.மேற்படி சுமார் ஐந்தடிக்கும் மேற்பட்ட நீளத்தினையுடைய இந்த புடையன் பாம்பு வயல் அறுவடையின்போது நெற்பயிரிடையே பதுங்கியிருந்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த பாம்பினை மீட்ட வயல் உரிமையாளர்கள் அதனை பத்திரமாக வேறொரு இடத்தில் விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதேவேளை யாழ்ப்பாணத்தில் அறுவடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு வயல்களிலிருந்தும் இவ்வாறான விரியன் பாம்பு மீட்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வயல் நிலங்களை பெரும்பாலும் விரும்பிய வாழ்விடமாகக் கொண்டுள்ள இந்தப் பாம்பு குறித்து மேலும் தெரியவருவதாவது,விரியன் இனத்தினைச் சேர்ந்த இந்த பாம்பு மிகவும் விஷம் நிறைந்ததாகும். இரவில் தனது இரைகளைத் தேடி நடமாடுவதுடன் பகலில் சோம்பேறிபோல் சுருண்டு படுத்திருக்கும் தன்மையினைக் கொண்டது. 

எனினும் வயல் அறுவடைக் காலங்களிலும் அறுவடைக் காலத்தின் பின்னரும் பெரும்பாலும் வயலில் தங்குவதையே விரும்புகிறது. காரணம் வயலில் நெற்கதிர்களை வேட்டையாடுவதற்காக வரும் எலிகளையும் சேற்றில் தப்பி வாழும் தவளைகளையும் வேட்டையாடுவதற்காக வயலை நாடி இவை வருகின்றன.

மேலும் இரையைக் கவ்வியபின்னர் தனது பல்லினூடாக கொடிய விஷத்தினை இரையின் உடலினுள் செலுத்துகின்றது. இதனையடுத்து இரை நிலைகுலைந்துபோய் அசைவற்றுக் காணப்பட்டதும் அந்த இரையை முழுமையாகவே விழுங்கிவிடும்.

இதேவேளை இரவில் நடமாடும் இதுபோன்ற பாம்புகள் மனிதக் கால்களையும் இரையாக கருதுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. பகலில் பார்வைத் திறன் குறைந்த இவ்வகையான பாம்புகளின் கண்களுக்கு இரவில் அசையும் உயிருள்ள பொருட்கள் சிவப்பு கலந்த ஒரு நிறமாகத் தெரிவதாகவும் அதனால் மனிதர்களின் பாதங்களையும் இரையாகவே கருதுவதாகவும் அந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் வழமையாக விஷப் பாம்புகள் தம்மைத் தீண்டினால் மட்டுமே திருப்பிக் கொத்தும் நிலையில் இவ்வகையான பாம்புகள் இரையாக நினைத்து தேடிச் சென்று தீண்டும் தன்மையுள்ளவையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் வயல் அறுவடைக்காலம் தொடங்கியுள்ளதால் இவ்வாறான பாம்புகள் நெற்பயிர்களினிடையே பதுங்கிக் காணப்படும் என்பதுடன் பழுப்பு நிறமாக காணப்படுவதனால் வைக்கோலுக்கும் இதற்கும் வித்தியாசம் குறைவாக காணப்படுகின்றது.இதனால் வயலில் அறுவடை செய்வோர் மிகுந்த அவதானத்துடன் அறுவடை நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என அவசரமாக எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: