தமிழ்லீடர்

யாழ்-வட்டுக்கோட்டை ஆலயத்தில் திடீரென்று ஏற்பட்ட பதற்றம்!!! அச்சத்தில் மக்கள்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முதலியார் ஆலயத்தில் நேற்றைய தினம் திடீரென்று தோன்றிய சுழற்காற்றினால் சற்று நேரம் பதற்றம் நிலவியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

மேற்படி கடந்த சனிக்கிழமை சங்காபிஷேகம் மற்றும் திருவூஞ்சல் அலங்காரப் பூசையுடன் நிறைவுபெற்ற குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் இரவு வயிரவர் மடை இடம்பெறவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

வயல் சார்ந்த சூழலில் அமைந்துள்ள முதலியார் ஆலயத்தில் அம்பாள் முன்பள்ளி சிறுவர்களுக்கான அறநெறிப் போதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது இந்த திடீர் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இதனை நேரில் கண்டவர்களின் கருத்துப்படி,

வயல் நடுவே திடீரென பாரிய சுழற்காற்று தோன்றி நிலத்தில் இருந்த சிறிய சருகுகள் உள்ளிட்ட பொருட்களை உயரம்வரை கொண்டுசென்றதுடன் ஆலயத்தை நோக்கி நகர்ந்துள்ளது. 

இதன்போது அல்லோலகல்லோலப்பட்ட சிறுவர்கள் மற்றும் ஆலயத்தில் நின்ற பெரியவர்கள் அங்கிருந்த தூண்களைப் பற்றியவாறு நின்றுள்ளனர்.நகர்ந்துவந்த சுழற்காற்று ஆலயத்தில் போடப்பட்டிருந்த தகரப் பந்தலைப் பிடுங்கி எறிந்துள்ளதுடன் மடைப்பள்ளி நோக்கி நகர்ந்து அதன் கூரைத் தகடுகளை குறுக்குச் சட்டங்களுடன் சேர்த்து பிடுங்கியெறிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த சுழல்காற்று அணைந்துவிட்டது.

இதனால் ஆலயத்தில் பலத்த சேதம் ஏற்பட்டதுடன் பந்தலில் இருந்த தகரங்கள் உயரத்தில் தூக்கி வீசப்பட்டதனால் ஏற்படவிருந்த அனர்த்தத்திலிருந்து அங்கிருந்தோர் அருந்தப்பு தப்பியதாக கூறப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த சுழல் காற்று உருவாக்கத்தின்போது நேரில் கண்டவர்கள் அது ஒரு அமானுசமாக இருக்கலாம் எனவும் தெய்வக்குற்றமாக இருக்கலாம் எனவும் அஞ்சுகின்றனர். 

ஏனெனில் அந்தச் சந்தர்ப்பத்தின்போது ஆலயத்திற்கு அருகாமையில் இருந்த வீடுகளில் காற்று வீசியதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. அத்துடன் வேறெங்குமில்லாது கோவிலில் மட்டும் பலத்த சுழல்காற்று எவ்வாறு தோன்றியது எனவும் சந்தேகிக்கின்றனர்.பலவித அற்புதங்கள் நிறைந்ததாக கிராம மக்களால் நம்பப்படும் முதலியார் ஆலயத்தின் மூலமூர்த்தியான முருகன், குற்றம்குறைகளைப் பொறுக்கமாட்டார் என்ற ஐதீகம் மக்களிடத்தில் உள்ளது. 

இதுகுறித்து ஆலயத்தின் திருவூஞ்சல் பிரபந்தத்திலும் குறிப்புக்கள் உள்ளன.எவ்வாறாயினும் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு இம்முறை ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளதுடன் ஆலயத்தின் சுவாமி எழுந்தருளும் வெளிவீதி முதன்முறையாக அகலிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: