விக்கியின் மாவீரர் தின அறிக்கை எதிரொலி – நீக்கப்பட்டது பொலிஸ் பாதுகாப்பு

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு முன்னறிவித்தல் ஏதுமின்றி உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நாளையொட்டி விக்கினேஸ்வரன் அவர்களால்  வெளியிடப்பட்டிருந்த அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் நிலையில் நேற்று மாலை மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்று 24 மணிநேரங்கள் கூட ஆகியிராத நிலைமையில் உடனடியாக அவரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்லூர் வீதியிலுள்ள அவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும்  நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதிக்கும்  பொலிஸ் மா அதிபருக்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறான நிலைமையில் தற்போது திடீரென அவரின் பாதுகாப்புகள் அகற்றப்பட்டுள்ளமை பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு விக்கினேஸ்வரன் அவர்கள் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கை:

உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூருவது எமது கடமை

உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை புராதன கிரேக்கர் காலம் முதல் இன்று உலகில் இடம்பெறும் யுத்த காலங்களின் போதும் அதன் பின்னரும் காண முடியும். விடுதலை வீரர்களை நினைவு கூருவது அவரவர் சார்ந்த சமூகங்களின் கடமை. இன்றைய மனித நாகரிகத்தின் முக்கியமான ஒரு பண்பாக இது காணப்படுகிறது. முரண்பாடுகளுக்கான தீர்வு கோட்பாடுகளிலும் யுத்தங்களில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நினைவுகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் உரிமைக்கு எதிராகத் தெற்கில் கடும் எதிர்ப்பு வெளியிடப்படும் துர்பாக்கிய நிலைமை இன்று காணப்படுகிறது. யுத்தத்தில் உயிர்நீத்த தமது பிள்ளைகளை தாய் தந்தையர் நினைவுகூர்ந்து அழுவதையோ, தமது உடன்பிறப்புக்களை சகோதரங்கள் நினைவு கூர்ந்து தேற்றிக் கொள்வதையோகூட சகித்துக்கொள்ள முடியாத தெற்கின் இழி மனோநிலையை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக உயிர் நீத்த எமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அவ்வாறு எதிர்ப்பவர்கள் எம் மக்கள் மனதில் மேலும் மேலும் உறுதியையும் சுதந்திர தாகத்தினையும் மேலெழுச் செய்கின்றார்கள்.

அமைதியான வழியில் உரிய வழிமுறைகளை பின்பற்றி எமது மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன். எமது மக்கள் சுதந்திரமாகவும் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது துயில் கொள்ளும் உள்ளங்கள் எமது மக்களின் மனங்களில் எப்பொழுதுமே வாழ்ந்துகொண்டிருப்பர்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: