தமிழ்லீடர்

மன்னார் மனிதப் புதைகுழி மர்மம் தான் என்ன?

மன்னார் மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் 1477 – 1642 காலப்பகுதிக்கு உரியவை என்பது 95.4 விழுக்காடு உறுதி செய்துள்ளது புளோரிடா பீட்டா பகுப்பாய்வு நிறுவனம். சரி பிழைகளுக்கு அப்பால் இந்த ஆய்வின் முடிவை தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் ஏற்கத் தயாரில்லை என்பதே நிதர்சனம்.

இந்நிலையில் மன்னார் புதைகுழி அறிக்கையை ஆதரமாகக் கொண்டு, 1544 இல் இடம்பெற்ற வேதகலாபனையுடன் முடிச்சுப் போட்டு கதைகள் பரப்பிவிடப்படுகின்றன. இதன் பின்னணியில் பேரினவாத ஸ்ரீலங்கா அரசாங்கம் இல்லை என்று கருதினால் அது நம் தவறே. ஏனெனில் சங்கிலிய மன்னன் கால வேதகலாபனை ஏற்கனவே வரலாற்றில் தெளிவாக சொல்லப்பட்டதே. இந்த வேதகலாபனை இடம்பெற்ற இடத்தில்தான் தோட்டவெளி இராக்கினி தேவாலயம் அமைக்கப்பட்டது என்றும், வேத கலாபனையில் கொல்லப்பட்டவர்களுக்கான சமாதி உள்ளது என்றும் உறுதியான தகவல்கள் ஏலவே உள்ளன.

இவ்வாறான நிலையில் மகாவம்ச புனைவுக் கதை போன்று சங்கிலியன் கால வேதகலாபனைக் கதையை இப்போது தீயாய் பரவ விடுவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை தமிழர்கள் அனுமானித்தாக வேண்டும். அண்மையில், – சிவராத்திரி விரத நாளுக்கு முதல் நாள் திருக்கேதீஸ்வரம் கோயில் அமைந்துள்ள மாந்தை பகுதியில் கிறிஸ்தவ – இந்து மதங்களின் முரண்பாடு உச்சம் பெற்றது. இதன் விளைவால் மாந்தை லூர்து மாதா ஆலயத்தின் அருகாக செல்லும் வீதியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வளைவு அடித்துடைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மத ரீதியான முறுகல் நிலை உச்சம்பெற்றது. எனினும் நீதிமன்றத் தலையீடு, மற்றும் மதத் தலைவர்களின் தலையீடுகளால் இந்த வன்முறை மேலும் தீவிரமாகவில்லை. எனினும் இந்த வன்முறையை மேலும் தூண்டும் விதமாக சிவராத்திரி நாளில் இரு இளைஞர்கள் – இவர்கள் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் – சில கருத்துக்களை ஆலயச் சூழலில் பரப்பினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. தொடர்ந்து கொச்சைத் தமிழில் துண்டுப்பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இவற்றின் உண்மை நோக்கம் அறிந்த மக்கள் அமைதி காத்ததால் எந்த விபரீதங்களும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இப்போது கிறிஸ்தவ – இந்து மத முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் விதத்தில் மனிதப் புதைகுழி காலத்தை வைத்து சங்கிலிய மன்னன் கிறிஸ்தவர்களை கொன்றான் பதிலுக்கு போர்த்துக்கேயர் இந்துக்களை கொன்றனர் என திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுகின்றன. இதனிடையே மத முரண்பாட்டைத் தூண்டும் விதத்திலான சமூகவலைத்தள பதிவுகளும் அதிகம் இடப்படுகின்றன.

இந்த சமூகவலைத்தளங்களின் பின்னணியில் இருப்பவர்கள் அரச வேலை வாய்ப்புக்காக, சில தனிப்பட்ட தேவைகளுக்காக அரச கட்சியின் முக்கியஸ்தர்களை நாடியவர்கள் என்பது நம்பகமான வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்றது. மன்னாரில் கிறிஸ்தவ – இந்து மத முறுகலை ஏற்படுத்தி விட்டது போன்று மட்டக்களப்பில் தமிழ் – முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் கொழும்பில் கடந்த வருட முற்பகுதியில் இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டது. இத்தகவலை கூட்டத்தில் பங்குபற்றிய ஒருவரே தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் யாழில் இருந்து வெளியாகும் வார இதழ் ஒன்றுக்குத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த மூளைச்சலவை கூட்டத்தின் முடிவில் பங்குபற்றிய இளைஞர்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. தாங்கள் கேட்கும் விதத்தில் நடந்துகொண்டால் நாட்டின் உயரிய மக்கள் பதவியில் இருப்பவரை சந்திப்பதுடன், அவரே உங்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைப்பார் என்பதே அது. இது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு மட்டுமல்ல வடக்கு, கிழக்கின் பல மாவட்டங்களிலும் அரச கட்சியை தேவைக்காக நாடிய இளைஞர், யுவதிகளுக்கும் இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டது.

உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட அழிவுகள் – இழப்புகள் – அவலங்கள் – ரணங்களை கண்ட பிறகும் ஏன் இவ்வாறான மதப் பிரச்சினையை பேரினவாத அரசாங்கம் கையில் எடுக்கிறது என்பது ஆய்வுக்குரியதே. இப்போது ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பிரச்சினைத் தீர்வுக்கு கால அவகாசத்தை இலங்கை கோரவுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகள் பலவற்றை இலங்கை நிறைவேற்றவில்லை. குறிப்பாக மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான பொறுப்புக்கூறல், அரசியல் கைதிகளின் விடுதலை, பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு என்பவற்றில் பெரும் முன்னேற்றம் எதுவும் இடம்பெறவில்லை.

 

மேலும் வடக்கு – கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தை வைத்திருக்கவும், பொதுமக்களின் காணிகளில் படையினர் தொடர்ந்தும் தங்கியிருக்கவும் இப்பகுதியில் சில பிரச்சினைகள் தேவை. அதை நோக்காகக் கொண்டே மதப் பூசல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. மேலும், வடக்கு – கிழக்கில் தமிழர்களுக்குள் பிரச்சினைகள் இருந்தால் அவர்களின் ஒரே கோரிக்கையான அதிகாரப் பகிர்வு, மற்றும் போரால் ஏற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் மீறல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் அமிழ்த்தப்பட்டு விடும்.

தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வில் தீவிரமாக போராடி வரும் கத்தோலிக்க பீடங்கள், மத குருக்கள்மார் இந்து – கிறிஸ்தவ பிரச்சினையால் இரண்டுபட்டு விடுவர். இதனால் தமிழ் மக்களின் கோரிக்கை ஒற்றைக் கோரிக்கையாக ஒலிக்காது செய்துவிட முடியும். மேலும், வடக்கில் இப்போது இந்துத் தமிழர்களின் பாரம்பரிய பூமியும் – மத வழிபாட்டு இடங்களும் பௌத்த பேரினவாதத்தால் ஆக்கிரமிக்கப்படுகின்றது. முக்கியமாக திருகோணமலை திருக்கோணேஸ்வரம், வவுனியா வெடுக்குநாறி மலை, முல்லைத்தீவு செம்மலை நீராவிப்பிட்டி பிள்ளையார் என இதற்கான உதாரணங்கள் நீண்டது.

இவ்வாறு பௌத்த மயமாக்கப்படும் கைங்கரியத்துக்கு எதிரப்புகள் உடனுக்குடன் தொடர்கின்றன. கிறிஸ்தவ – இந்து மத மோதல் உக்கிரமானால் அதை மேலும் தூண்டிவிட்டு பௌத்த ஆதிக்கத்தை நிலைநிறுத்தி விட முடியும் என்ற நிலையும் உள்ளது. இவர்கள் விழித்துக் கொள்வதற்குள் வடக்கு பூமியில் பௌத்தம் வேரூன்றி விடும். ஏற்கனவே வடக்கு – கிழக்கில் ஆயிரம் புத்த விகாரைகள் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும் அரசுக்கு அதற்கான சூழ்நிலையை இங்கு ஊற்றெடுக்கும் வேறு மதங்களின் மோதல் அவசியம்.

இவ்வாறான மத முரண்பாடுகளை தூண்டுவதன் மூலம் ஜெனிவாவில் கால அவகாசம் பெற்று பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்தல். போர்க் குற்றம், மனித உரிமைகள் மீறலை செய்த இராணுவத்தை காப்பாற்றல், தொடர்ந்தும் அரசுக்கு சாதகமான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காதிருத்தல், இதன் மூலம் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளிலேயே வைத்திருத்தல், வடக்கு – கிழக்கில் இராணுவத்தை நிலைத்திருக்கச் செய்தல், பொதுமக்களின் காணிகளை தொடர்ந்தும் இராணுவம் பயன்படுத்தல், வடக்கு – கிழக்கில் பௌத்தத்தை பரப்புதல், இலங்கை முழுவதும் சிங்கள – பௌத்த பூமியாக மாற்றுதல், இவற்றின் மூலம் தென்னிலங்கை வாக்குகளை கவருதல், ஒட்டுமொத்த கோரிக்கையான தமிழ்த் தேசியத்தை பிரித்தாள்வதன் மூலம் வலுவிழக்கச் செய்தல் என ஒரு கல்லில் பல மாங்காய்களை அரசு அடிக்க முனைகிறது. இதற்கு தமிழர்கள் துணை போவார்களா…?

 

தமிழ்லீடருக்காக காங்கேயன்

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: