தமிழ்லீடர்

2009 மே 18ஆம் திகதி இடம் பெற்ற இனப்படுகொலை உள்ளிட்ட போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தாக்கல்.

2009 மே 18ஆம் திகதி இடம் பெற்ற இனப்படுகொலை உள்ளிட்ட போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதமளவில் பிரித்தானிய நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் திவயின என்ற சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் சனிக்கிழமை இந்த செய்தியை பிரசுரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு உட்பட மேலும் பல விடயங்களை எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 40ஆவது அமர்வில் குறித்த மூன்று பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை தொகுத்து முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஸ்ரீலங்கா பேரவையின் செயலாளர் சட்டத்தரணி ஜயராஜ் பலிஹவடனவை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, இறுதிப் போரில் இராணுவத் தளபதியாக பதவிவகித்த நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்க ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படுகின்ற புலம்பெயர்ந்த சட்டத்தரணியான சிவானி தியாகராஜா தலைமையில் பிரித்தானியாவிலுள்ள அமெரிக்க சட்டத்தரணிகள் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த வழக்கு தாக்கல் செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்தலை குற்றவியல் குற்றமாக கருதப்படுவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் ஊடாகவே மஹந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பீல்ட் மார்ஷல் பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வரும் தீர்மானங்களுக்கு அமைவாக ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: